NATIONAL

இந்திய சமூகத்தின் நலனை அரசு ஒருபோதும் புறக்கணித்ததில்லை! அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

கோலாலம்பூர் அக் 27- அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட
2024 பட்ஜெட்டில் இந்திய சமூகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லை என்ற கூற்றை மனித வளத்துறை அமைச்சர் வி. சிவக்குமார் முற்றாக மறுத்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024 பட்ஜெட் அனைத்து இனங்களையும் அரவணைக்கும் பட்ஜெட் ஆகும்.

இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலனை ஒற்றுமை அரசு ஒருபோதும் புறக்கணிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்திய சிறு தொழில்முனைவோர் நிதியளிப்புத் திட்டத்திற்காகத் தேசிய வணிகக் குழுவின் பொருளாதார நிதி (தெக்குன்) மூலம் வழங்கப்படும் 3 கோடி வெள்ளியுடன் 10 கோடி வெள்ளி மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவுக்கு (மித்ரா) ஒதுக்கப்பட்டுள்ளது.

“கோயில்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் 5 கோடி வெள்ளியை நிதியுதவியாக அரசு வழங்கியுள்ளது,

தமிழ் தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை தொட்டுப் பேசிய சிவக்குமார், பள்ளிக் கழிவறை பராமரிப்புப் பணிகளுக்காக 152 தமிழ்ப் பள்ளிகளுக்குத் தலா 70,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பள்ளி பராமரிப்புக்காக 2 கோடி வெள்ளி உட்பட கிட்டத்தட்ட 5 கோடி வெள்ளி இந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஒதுக்கீடுகளாலும் இந்தியர்களும் பயனடைந்துள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜசெக கட்சி சார்பில் தமிழ் ஊடகவியலாளர் களுடன் தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :