NATIONAL

வெள்ளப் பாதிப்பினால் சிலாங்கூர், பேராக்கில் 9 நிவாரண மையங்கள் திறப்பு- 400 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், நவ 6- சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் நேற்றிரவு
8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க
வைப்பதற்காக ஒன்பது தற்காலிக துயர் துடைப்பு மையங்கள்
திறக்கப்பட்டன.

சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் நேற்று மாலை 3.00
மணிக்கு ஐந்து தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன. தொடர்
மழை காரணமாக டிங்கில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்ததால் குடியிருப்பு
பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 67 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் கம்போங்
டத்தோ அகமது ரசாலி மண்டபம், தாமான் கெமிலாங் சமுக மண்டபம்,
ஜெண்டேராம் ஹிலிர் கிராம சமூக மேம்பாட்டு மண்டபம் ஆகிய
இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

டெங்கில் சமூக மண்டபம் மற்றும் டெங்கில் தேசிய இடைநிலைப்பள்ளி
ஆகிய இடங்களிலும் இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
என்று அவர் தெரிவித்தார்.

பேராக் மாநிலத்தில் வெள்ளம் வடிந்து வருவதைத் தொடர்ந்து துயர்
துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 64
குடும்பங்களைச் சேர்ந்த 220 பேராக குறைந்துள்ளது என்று பேராக் மாநில
பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

நேற்று காலை இந்த எண்ணிக்கை 75 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேராக
இருந்தது. அவர்கள் அனைவரும் ஹிலிர் பேராக் மற்றும் கிரியான்
மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த செயலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

இதனிடையே, சங்காட் ஜோங்கில் உள்ள சுங்கை பீடோரில் நீர் மட்டம்
அபாயக் கட்டத்தில் உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை
தெரிவித்தது. இந்த ஆற்றின் வழக்கமான நீர் மட்டம் 2 மீட்டராக இருக்கும்
வேளையில் தற்போது அதன் அளவு 3.96 மீட்டராக உயர்ந்துள்ளது.


Pengarang :