NATIONAL

திவேட் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 92.5 விழுக்காடாக அதிகரிப்பு

கோம்பாக், நவ 6 – தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி  பயிற்சித் (திவேட்) துறையில் சான்றிதழ் முதல் இளங்கலை  வரையிலான பட்டதாரிகளின் வேலை  வாய்ப்பு விகிதம் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கடந்த 2022ஆம் ஆண்டில்  92.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் வேலை காலியிடங்களை நிரப்புவதற்கு  பட்டதாரிகளை முதலாளிகள் நல்ல முறையில் ஏற்றுக்கொள்வதை உயர் சந்தைப்படுத்தல் நிரூபிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கூறினார்.

பொதுமக்களின், குறிப்பாக பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் திவேட் திட்டத்தை விழாக்கள், பல்வேறு சமூக மற்றும் மின் ஊடக தளங்களில் அறிவிப்புகள் மூலம் நாடு முழுவதும் பிரபலப்படுத்துவதை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று அவர் சொன்னார்.

இனம் மற்றும் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் திறன் பயிற்சிக்கான பரந்த வாய்ப்புகளைத் ஏற்படுத்துவதன் மூலம்  திவேட்  திறன் பயிற்சித் திட்டங்களை மக்களின்  முக்கிய விருப்பத் தேர்வாக அரசாங்கம் மாற்றுகிறது  என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பத்து கேவ்ஸ்,  கம்போங் மிலாயு வீரா டாமாய் சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா மடாணி நிகழ்வில்  உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 2024 தவணைக்கு நாடு முழுவதும் உள்ள 1,334 திவேட் கல்விக் கூடங்களில்   மாணவர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 13 வரை mohon.tvet.gov.my என்ற இணைப்பின் மூலம் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திவேட் பயிற்சித் திட்டங்களில்   ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களை  நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் வழங்கப்படும் படிப்புகள் தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :