NATIONAL

சிலாங்கூர், பேராக்கிலுள்ள 10 வெள்ள நிவாரண மையங்களில் 800 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், நவ 7- சிலாங்கூர் மற்றும் பேராக்கில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக நேற்றிரவு 8.00 மணி வரை
பத்து வெள்ள நிவார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் நேற்று காலை 157
குடும்பங்களைச் சேர்ந்த 579 பேர் தங்கியிருந்த வேளையில் நேற்றிரவு
அந்த எண்ணிக்கை 144 குடும்பங்களைச் சேர்ந்த 547 பேராக குறைந்தது.

அவர்கள் அனைவரும் சிப்பாங் மற்றும் உலு லங்காட்டில்
அமைக்கப்பட்டுள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்
என்று சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் முகமை கூறியது.

செமினி மற்றும் பாங்கி தேசிய பள்ளிகளில் 87 பேர் தங்கியுள்ள
வேளையில் ஜெண்டரோம் ஹிலிர் சமூக மண்டபம், டத்தோ அகமது
ரசாலி சமூக மண்டபம், தாமான் கெமிலாங் சமூக மண்டபம், டெங்கில்
தேசிய பள்ளி ஆகிய இடங்களில் மேலும் 460 பேர் அடைக்கலம்
நாடியுள்ளனர் என அது குறிப்பிட்டது.

இதனிடையே, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை இன்று காலை அதிகரிப்பைக் கண்டது. நேற்று காலை 63
குடும்பங்களைச் சேர்ந்த 219 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த
வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 74 குடும்பங்களைச் சேர்ந்த
257 பேராக உயர்வு கண்டது.

ஹிலிர் பேராக் மற்றும் கிரியான் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள
நான்கு துயர் துடைப்பு மையங்களில் அவர்கள் அனைவரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில வெள்ள மேலாண்மை செயல்குழு
செயலகம் தெரிவித்தது.

ஹிலிர் பேராக் மாவட்டத்தில் நேற்றிரவு நிலவரப்படி 31 குடும்பங்களைச்
சேர்ந்த 103 பேர் பாடாங் தேம்பாக் சமூக மண்டபத்தில் தங்கியிருந்தனர். கிரியான் மாவட்டத்திலுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :