சட்டவிரோதத் தொழிற்சாலை நடத்துநர்களுடனான சந்திப்பில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகள் முன்வைப்பு

ஷா ஆலம், நவ 7- இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நேற்று
நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்
கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற ஆட்சிக்குழுவினால் முதன் முறையாக ஏற்பாடு
செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல் நிகழ்வில் தங்களின்
மனக்குறைகளை வெளிப்படுத்துவதற்கும் பரிந்துரைகளை
முன்வைப்பதற்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு
கிட்டியது.

சம்பந்தப்பட்டத் துறைகளிடமிருந்து நுட்ப அம்சங்கள் தொடர்பான
விளக்கங்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள்
பெறுவதற்கும் தொழிற்சாலை தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை
மாநில அரசு அறிந்து கொள்வதற்கும் இந்த சந்திப்பு ஒரு தளமாக
அமைந்தது.

சட்டவிரோத தொழிற்சாலை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய
பொறுப்பினை கொண்டுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில்
முதன் முறையாக இந்த சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளேன் என்று
இங் சுயி லிம் கூறினார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் நடைமுறை
வெற்றி பெறாமல் போனதற்கு காரணமாக அமைந்த விஷயங்கள் உள்பட
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த கருத்துகள், பரிந்துரைகள்
மற்றும் மனக்குறைகளை கேட்டறிவதற்கு இந்த சந்திப்பு எனக்கு
வாய்ப்பினை வழங்கியது என்று அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் உள்ள
சட்டவிரோத தொழிற்சாலை நடத்துநர்களுடனான சந்திப்பு நிகழ்வின்
போது அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோதத் தொழிற்சாலை
உரிமையாளர்கள் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர்,
இத்தகைய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அவர்கள் பாராட்டு
தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

சட்டவிரோதத் தொழிற்சாலைகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்
சட்டப்பூர்வமாக்குவதில் உதவும்படி மாநகர் மன்றத் தரப்பினரையும் அவர்
கேட்டுக் கொண்டார்.


Pengarang :