NATIONAL

கட்டண நிர்ணய செயல்முறை அடுத்தாண்டு அமல் – குடிநீர்க் கட்டணம் உயரும் சாத்தியம்

கோலாலம்பூர், நவ 9 – நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
பயனீட்டாளர்கள் அடுத்தாண்டு தொடக்கத்தில் குடிநீர்க் கட்டண உயர்வை
எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர்பான பரிந்துரையை தாம் ஆண்டு இறுதிக்குள்
அமைச்சரவையில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் வரும் 2024ஆம்
ஆண்டுவாக்கில் புதிய கட்டண செயல்முறை அமலாக்கம் காணும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும்
பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் தேசிய நீர் வள மன்றத்துடன்
விவாதம் நடத்தினோம். கட்டணம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்
என்பதில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாநில அரசுகளும்
ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அந்த கட்டண உயர்வு மிகவும் குறைவானதாக இருக்கும் எனக் கூறிய
அவர், இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன
என்றார்.

கட்டண நிர்ணய செயல்முறை தொடர்பான பரிந்துரையை இவ்வாண்டு
இறுதிக்குள் நாங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். மாநிலங்கள்
புதிய கட்டண விகிதங்களை அமல்படுத்துவதற்கான அனுமதி வரும்
2024ஆம் ஆண்டு வாக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்
அவர்.

எனினும், அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தப் பின்னர் அனைத்து
மாநிலங்களும் கட்டண உயர்வை அமல்படுத்துமா என்று தெரியவில்லை
என நிக் நஸ்மி சொன்னார்.

மக்களவையில் இன்று தும்பாட் தொகுதி உறுப்பினர் டத்தோ மும்தாஸ்
முகமது நாவி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். குடிநீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :