Budget

சிலாங்கூர் அரசின் 253 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டம்-  மந்திரி புசார் தாக்கல் செய்தார்

ஷா ஆலம், நவ 10- மொத்தம்  253 கோடி வெள்ளி மதிப்புள்ள 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த தொகையில் 52.6 விழுக்காடு அல்லது 133 கோடி வெள்ளி நிர்வாகச் செலவினங்களுக்கும் 47.4 விழுக்காடு அல்லது 120 கோடி வெள்ளி மேம்பாட்டுச் செலவினங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று  அவர் சொன்னார்.

அடுத்தாண்டில் 220 கோடி வெள்ளியை வசூலிக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறிய அவர், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் 2023ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 200 கோடி வெள்ளி வசூலிக்கப் பட்டதன்  அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக சொன்னார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் கிடைக்கும் வருமானத்தில் அதிகப்பட்சத்  தொகை நில பிரீமியம் மூலம் பெறப்படும். மாநிலத்தின் மொத்த நிதி வசூலில் இது 40.5 விழுக்காடாக அல்லது 89 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியாக இருக்கும் என்றார் அவர்.

மாநிலத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய இரண்டாவது துறையாக நில வரி அமையும். நில வரி மூலம் 28.3 விழுக்காட்டுத் தொகை அல்லது 62 கோடியே  26 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வசூலிக்கப்படும்.

மூன்றாவது இடத்தில் மத்திய அரசு வழங்கும் தொகை அமையும். மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் தொகை 8.9 விழுக்காட்டை அதாவது 21 கோடியே 29 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியாக இருக்கும் என்று அமிருடின் சொன்னார்.

அடுத்தாண்டில் மாநிலத்தின் வருமானம் 220 கோடி வெள்ளியாகவும் பட்ஜெட் 253 கோடி வெள்ளியாகவும் இருக்கும் நிலையில இந்த வரவு செலவுத் திட்டம் 33 கோடி வெள்ளி பற்றாக்குறையைக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த பற்றாக்குறை 12 கோடி வெள்ளி குறைவானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :