Budget

அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மாத சிறப்பு ஊக்கத்தொகை- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 10- மாநிலத்தில் வரியை வசூலிப்பதில் அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இரண்டரை மாத சம்பளம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒரு மாத சம்பளம் டிசம்பர் 28ஆம் தேதி வழங்கப்படும் வேளையில் அரை மாத சம்பளம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எஞ்சிய ஒரு மாத சம்பளம் இவ்வாண்டு மத்தியில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளின் போது வழங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

மாநிலத்தில் வரி வசூலிப்பை சிறப்பான முறையில் மேற்கொள்வதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய அரசு ஊழியர்களின் அர்ப்பண உணர்வை போற்றும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த சிறப்பு ஊக்கத் தொகையை அறிவிக்கிறேன் என்றார் அவர்.

மத்திய அரசினால் சம்பளம் வழங்கப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத் தொகை பொருந்தும். அவர்களும் இரண்டரை மாத ஊக்கத் தொகையைப் பெறுவர் என்று இன்று மாநில சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.


Pengarang :