NATIONAL

டெங்கிலில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்ள வெ.70 கோடி ஒதுக்கீடு

புத்ராஜெயா, நவ. 11 – டெங்கில் நகர் முதல்  லபோஹான் டாகாங் வரை வெள்ளத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 72 கோடியே 57 லட்சம் வெள்ளியை  ஒதுக்கீடு செய்துள்ளதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.

உயர் முன்னுரிமை வெள்ளத் தடுப்பு (டி.பி.பி.டி.) முன்னெடுப்பின் கீழ்  நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் சுங்கை லங்காட் முதல் பிரிவு மற்றும் சுங்கை லங்காட் இரண்டாம் பிரிவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 120,000 குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சினைக்குத்  தீர்வு காண உதவும்  என்று  அவர் சொன்னார்.

தற்போது, சுங்கை லங்காட் முதல் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் அமலாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், வரும் 2027 இல் இப்பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அதே நேரத்தில் சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி 2030 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

குறுகிய கால நடவடிக்கையாக அப்பகுதியில் வடிகால் அமைப்பு பராமரிப்பு பணிகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி  சுமார் ஒரு மணிநேரம் தொடர்ந்து பெய்த கன மழையால் கம்போங் சுங்கை புவா, கம்போங் ஜெண்டராம் ஹிலிர், கம்போங் செம்பராய், கம்போங் ஸ்ரீ தஞ்சோங், தாமான் டெலிமா, கம்போங் ஒராங் அஸ்லி சுங்கை மெலுட் உள்ளிட்ட  பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வெள்ளம் சுமார் 148 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 395 குடியிருப்பாளர்கள் நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.


Pengarang :