NATIONAL

நிழல் பொருளாதாரம் மீது வரி விதிக்கும் அரசின் நடவடிக்கை  மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், நவ 20 – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுமார் 30 சதவீதம் பங்களிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிழல் பொருளாதாரத்திற்கு வரி வசூலிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தின்  மையமாக அம்சமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கேள்வி பதில் அமர்வின் போது நிதி அமைச்சரிடம் கோல திரங்கானு பெரிக்காத்தான் உறுப்பினர்  டத்தோ அகமது அம்சாட் முகமது @ ஹாஷிம் இந்த கேள்வியை முன்வைக்கவுள்ளார்.

அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு முதலீட்டு நிறுவனங்கள்  வாயிலாக  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள  மலேசிய ரிங்கிட்டின் முதலீட்டு மதிப்பு  எவ்வளவு என்ற கேள்வியை தெப்ராவ் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் ஜிம்மி புவா  வீ ஸீ    நிதி அமைச்சரிடம் முன்வைப்பார்.

மலேசிய பங்குச் சந்தையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப முழு முதலீடும் உள்ளதா என்பதையும் புவா அறிய விழைகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து மனநலத்திற்கான தேசிய மையத்தின் செயல்பாட்டு நிலை, முக்கிய இலக்குகள் மற்றும் சமீபத்திய சாதனைகளை விளக்குமாறு சுகாதார அமைச்சரை பாரிட் சூலோங் உறுப்பினர் டத்தோஸ்ரீ நோராய்னி அகமது கேட்கவிருக்கிறார்.

கேள்வி பதில் அமர்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் குழு நிலையிலான 2024ஆம் ஆண்டு விநியோக மசோதா மீதான விவாதம் மக்களவைக் கூட்டத் தொடரில் தொடர்ந்து நடைபெறும்.


Pengarang :