NATIONAL

காரிலிருந்த வெடி மருந்து மாயம் – தகவல் அளிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், நவ 20- ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற காரிலிருந்து வெடி
மருந்து அடங்கிய அட்டைப் பெட்டி காணாமல் போனதாகப் புகார்
செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 28 வயது ஆடவர் ஒருவரிடமிருந்து கடந்த
செவ்வாய்க்கிழமை இரவு 10.28 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாகக்
கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது
ரிட்சுவான் முகமது நோர் சாலே கூறினார்.

பூச்சோங்கில் உள்ள குவாரி ஒன்றுக்கு அந்த வெடி மருந்தைக் கொண்டுச்
செல்லும் வழியில் அது காணாமல் போயிருக்கலாம் என தாம்
சந்தேகிப்பதாக அந்நபர் தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் சொன்னார்.

புகார்தாரர் தன் நண்பருடன் காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் பயணித்துக்
கொண்டிருந்த வேளையில் அவர் பயணம் செய்த நிசான் நவாரா காரின்
போனட் திறந்துள்ளதாக பின்னால் வந்த வாகனமோட்டி சமிக்ஞை
செய்தார் என்று அகமது ரிட்சவான் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

புகார்தாரர் உடனே காரை சாலையோரம் நிறுத்தி போனெட்டைச்
மூடியுள்ளார். அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசலாகவும் ஆபத்து
நிறைந்தும் காணப்பட்டதால் வாகனத்திலிருந்து பொருள் எதுவும் தவறி
விழுந்து விட்டதா என சோதிக்காமலே அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

காலை 8.45 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்து
பொருள்களை இறக்கிய போது காஸ்ட் பூஸ்டர் 400 ஜி.எம்.எஸ். என்ற
வெடி மருந்து பெட்டிகளில் ஒன்று காணாமல் போயிருந்தைதை அவர்
அறிந்துள்ளார். பின்னர் அவர் தாம் வந்த சாலையில் மறுபடியும்
சோதனையிட போது அந்த அட்டைப் பெட்டி காணப்படவில்லை என
அகமது ரிட்சுவான் தெரிவித்தார்.

வெடி மருந்தை கையாள்வதில் அலட்சியமாகச் செயல்பட்டது தொடர்பில்
குற்றவியல் சட்டத்தின் 286வது பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், அந்த வெடி
மருந்தை கண்டவர்கள் 016-4123834 என்ற எண்களுடன் விசாரணை அதிகா
சார்ஜன் ஜூல்பாட்ஸ்லியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :