NATIONAL

பேராக்கில் ஒரு வெள்ள நிவாரண மையம் மூடப்பட்டது- 75 பேர் மட்டுமே துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

ஈப்போ, நவ 20 – கிந்தா மாவட்டத்தின் தாமான் மேரு 2ஏ சமூக
மண்டபத்தில் எண்மர் தங்கியிருந்த வெள்ள துயர் துடைப்பு மையம்
நேற்றிரவு 9.30 மணியுடன் மூடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி கிரியான் மாவட்டத்தில் 22 குடும்பங்களைச்
சேர்ந்த 75 பேர் தங்கியிருக்கும் இரு தற்காலிக நிவாரண மையங்கள்
மட்டுமே இன்னும் செயல்பட்டு வருவதாகப் பேராக் மாநிலப் பேரிடர்
மேலாண்மை செயல்குழு செயலகம் கூறியது.

சங்காட் லோபாக் தேசிய பள்ளியில் செயல்படும் துயர் துடைப்பு
மையத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் ஆலோர் பொங்சு
தேசிய பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த
57 பேரும் தங்கியுள்ளதாக அச்செயலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இன்று மாலை மற்றும் இரவில் மஞ்சோங், பேராக் தெங்கா, ஹிலிர்
பேராக், பாகான் டத்தோ முவாலிம், பாத்தாங் பாடாங், கிந்தா ஆகிய
மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை
கணித்துள்ளது.

இதனிடையே, வெள்ளம் காரணமாகக் கிரியான் மாவட்டத்தின் ஜாலான்
செலாமா அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாகப்
பேராக் மாநில பொதுப்பணி இலாகா கூறியது.

பாத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள துரோலாக் செலாத்தான்
சாலையின் ஒரு தடத்தில் இலகு ரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க
அனுமதிக்கப்படுகிறது. அச்சாலையின் ஓரங்களில் மண் சரிவு
ஏற்படுள்ளதால் கனரக வாகனங்கள் பயன்படுத்துதற்கு அச்சாலை
பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.


Pengarang :