NATIONAL

அவசரத் தேவைகளுக்கான மூன்றாவது இ.பி.எஃப். கணக்கு அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கும்

கோலாலம்பூர், நவ 20 – ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) அவசரத்
தேவைகளுக்கான மூன்றாவது கணக்கு அல்லது நெகிழ்வு கணக்கு
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் செயல்படத் தொடங்கும் என்று துணை
நிதியமைச்சர் 1 டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சேம நிதி வாரிய கணக்கிற்கான லாப ஈவுத்
தொகை அறிவிக்கப்படும். அதன் பின்னர் இந்த மூன்றாவது அல்லது
நெகிழ்வு கணக்கு தொடர்பான வழிமுறைகளை நிதியமைச்சு துல்லியமாக
வெளியிடும் என்று அவர் சொன்னார்.

இதில் தொடர்புடைய நிறுவனங்கள் இந்த நெகிழ்வு கணக்கு தொடர்பில்
தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். அந்த கருத்துகளை அவை
நிதியமைச்சு அல்லது சேம நிதி வாரியத்திற்கு அனுப்பலாம் என்று அவர்
குறிப்பிட்டார்.

இன்று இங்கு ஆசியான் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் 40வது இயக்குநர்
வாரிய மாநாடு மற்றும் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை மக்களின் வருமானம் பாதிக்காத வகையில் குறிப்பிட்
வழிமுறைகளுடன் அமல்படுத்த விரும்புகிறோம். அவசர வேளைகளில்
மட்டுமே இந்த கணக்கிலிருந்து பணத்தை மீட்க முடியும் என அவர்
சொன்னார்.

அவசர நிலை என்பதன் பொருள் குறித்து பின்னர் விரிவாக
விவாதிக்கப்படும். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் போது
மேற்கொள்ளப்பட்ட நான்கு கட்ட பண மீட்பு நடவடிகைகைகளின்
வாயிலாக 14,500 கோடி வெள்ளி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு மேலும்
பண மீட்புக்கு அனுமதிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்து விட்டது
என்றார் அவர்.

எனினும், அவசர வேளைகளில் பணத்தை மீட்பதற்கு அனுமதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினர் தொடர்ந்து விடுத்து
வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :