NATIONAL

மைமிண்டா வழி ஒரு மாதத்திற்குள் 17,300 பேருக்கு மனநலச் சோதனை- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், நவ 20 – மைசெஜாத்ரா செயலியில் மைமிண்டா எனும்
பிரிவு தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் மொத்தம் 17,300 மனநலச்
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மக்களவையில் இன்று
தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இந்த பிரத்தியேக பிரிவு
ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த
எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சர் டாக்டர்
ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

சோதனை செய்யப்பட்டவர்களில் 23 விழுக்காட்டினர் அல்லது 3,983 பேர்
மனச் சோர்வுக்கு ஆளாகியுள்ள வேளையில் மேலும் 15 விழுக்காட்டினர்
அல்லது 2,592 பேர் மனப் பதற்ற அபாயத்தைக் கொண்டுள்ளனர் என்று
அவர் சொன்னார்.

இந்த அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு மைமிண்டா வாயிலாக
நேரடியாக ஆலோசக சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கேள்வி
மக்களவையில் நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

மைமிண்டா பிரிவு ஆரம்பிக்கப்பட்டது முதல் அதன் அடைவு நிலை
குறித்து பாரிட் சூலோங் உறுப்பினர் டத்தோஸ்ரீ நோராய்னி அகமது
எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில் ஜலிஹா இவ்வாறு
சொன்னார்.

முன்னதாக, நோராய்னியின் மூலக் கேள்விக்குப் பதிலளித்த அவர், மன நல
நெருக்கடி ஹாட் லைன் அல்லது ஹீல் லைன் 15555 என்ற தொலைபேசி
சேவையின் வாயிலாக இதுவரை 26,139 அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தார்

அவற்றில் 16,943 அழைப்புகளுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு
வழங்கப்பட்ட வேளையில் மேலும் 9,197 பேருக்கு பிரத்தியேக மன நல
ஆலோசகச் சேவை வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :