NATIONAL

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்க சிறுநீர் பரிசோதனை திட்டம் – பெமாடாம்

ஈப்போ, நவ 20: மலேசிய போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தின் (பெமாடாம்) பேராக் பிரிவு, மாநில காவல்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை (ஏஏடிகே) ஆகியவற்றுடன் இணைந்து பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்க சிறுநீர் பரிசோதனை திட்டத்தை நடத்தும்.

இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் முகமட் அஸ்லான் ஹெல்மி தெரிவித்தார்.

“எங்கள் அணுகுமுறை மாணவர்களைத் தண்டிப்பது அல்ல, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது. அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும், நன்மை பயக்கும் செயல்களில் அவர்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் தெரியப்படுத்த விரும்புகிறோம்,” என்று பேராக் பெமாடாம் மற்றும் பேராக் ஃபிட் மேனியா கார்னிவல் 2023 ஐத் திறந்து வைத்து ஊடகங்களிடம் கூறினார்.

300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு ஆரோக்கியமாக வாழ்வது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

போதைப்பொருளின் ஆபத்துகள் மற்றும் பெமாடாமின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முகமட் அஸ்லான் கூறினார்.

“அடுத்த ஆண்டிற்குப் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஐந்து திட்டங்களை நாங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளோம். எங்களின் இலக்கு இளைஞர்கள் மட்டுமல்ல, பல்வேறு தரப்பு மக்களும் தான்” என்று அவர் மேலும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :