NATIONAL

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மத்திய தவணைக்கான ஆய்வறிக்கை அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், நவ 21- முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (ஆர்.எஸ்-1)
மத்திய தவணைக்கான ஆய்வறிக்கையை மாநில அரசு அடுத்தாண்டு
தாக்கல் செய்யவுள்ளது. இந்த முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள
அனைத்துப் பொருளாதாரத் திட்டங்களும் சீராக நடைபெறுவதை உறுதி
செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநில சட்டமன்றத்தில் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக்
கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முன்னெடுக்கப்பட்ட
ஒவ்வொரு திட்டத்தையும் மதிப்பீடு செய்வதற்கான சிறந்த
அணுகுமுறையாக இது விளங்குகிறது என்றார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கும் அதன்
ஆக்கத்தன்மையை மதிப்பீடு செய்வதற்கும் ஏதுவாக அத்திட்டத்தின்
மத்திய தவணைக்கான ஆய்வறிக்கையை வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி
அல்லது மார்ச் மாதம் தாக்கல் செய்யவிருக்கிறோம். இந்த முதலாவது
சிலாங்கூர் திட்டத்தை நாம் தாக்கல் செய்த சமயத்தில் மத்திய கிழக்கு
போர் உள்ளிட்ட உலக நிலவரங்களை நாம் அறிந்திருக்கவில்லை என்றார்
அவர்.

இந்த மத்திய தவணைக்கான ஆய்வறிக்கை என்பது முதலாவது
சிலாங்கூர் திட்டத்தை மதிப்பீடு செய்தற்கான சிறந்த களமாக
விளங்குகிறது. மாநிலத்தின் நிதித் திட்டங்கள் மக்களுக்கு எப்போதும்
சிறந்தவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டது என்பதை இது
நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான விநியோக
மசோதா (2024 வரவு செலவுத் திட்டம்) மீதான விவாதத்தை முடித்து
வைத்து உரையாற்றுகையில் அமிருடின் இவ்வாறு கூறினார்.

வரும் 2026ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30
விழுக்காட்டு பங்களிப்பை வழங்கும் ஆற்றலை சிலாங்கூர்
கொண்டிருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் இலக்குக்கு ஏற்ப மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 30 விழுக்காட்டு பங்களிப்பை நாம் வழங்க வேண்டுமானால்
ஆண்டுக்கு 2,240 கோடி வெள்ளியை நாம் கூடுதலாக ஈட்ட வேண்டும்
என்றார் அவர்.


Pengarang :