NATIONAL

பிற மாநிலத்தினரையும் ஈர்க்கும் சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்புச் சந்தை- இங் ஸீ ஹான் தகவல்

ஷா ஆலம், நவ 21- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்யும் வேலை
வாய்ப்பு சந்தைகள் அதிக சம்பளம் தரக்கூடிய பதவிகளை எதிர்பார்க்கும்
பிற மாநிலத்தைச் சேர்ந்த வேலை தேடுவோரையும் பெரிதும் ஈர்த்து
வருவதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஆயுள் அறிவியல், உணவு மற்றும் பானத் தயாரிப்பு, மின்சார மற்றும்
மின்னணுவியல், சரக்கு பட்டுவாடா சேவை. இலக்கவியல் பொருளாதாரம்
உள்ளிட்ட மாநிலத்தின் மேம்பாட்டிற்குப் பங்காற்றக்கூடிய துறைகளில்
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மாநில அரசு ஆக்ககரமான
நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

பொது மக்களுக்குக் குறிப்பாகச் சிலாங்கூர் பிரஜைகளுக்குப் பொருத்தமான
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் மாநில அரசின் வியூகத்திற்கேப்
இந்நடவடிக்கை அமைகிறது என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினருமான
அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே நாங்கள் உயர் தாக்கம் கொண்ட துறைகளைத்
தேந்தெடுக்கிறோம். இதன் மூலம் சிலாங்கூர் மக்களுக்கு உயர் வருமான
தரக்கூடிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என அவர்
சொன்னார்.

உண்மையைச் சொன்னால், நமது வேலை வாய்ப்புச் சந்தைகள்
சிலாங்கூரில் உயர் வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பை
எதிர்பார்க்கும் பிற மாநிலத்தினரையும் பெரிதும் ஈர்த்து வருகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

மாநில பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில் முதலாவது
சிலாங்கூர் திட்டத்திற்காக ஒன்பது உயர் தாக்கம் கொண்ட
தொழில்துறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சிஜங்காங் தொகுதி உறுப்பினர் டத்தோ
டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :