NATIONAL

போலீஸ் நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு- அறுவர் கைது

கோலாலம்பூர், நவ 21- தலைநகர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஆடம்பர
அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை
மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள்
கடத்தல் கும்பலின் நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என
சந்தேகிக்கப்படும் இந்தோனேசிய ஆடவனும் ஒரு பெண் உள்பட ஐந்து
உள்நாட்டினரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ்
தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

கோலாலம்பூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உறுப்பினர்கள்
அடங்கிய குழு அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பு
கூடத்தில் இரவு 7.20 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையில் 26
முதல் 46 வயது வரையிலான அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக
அவர் சொன்னார்.

அந்த சோதனை நடவடிக்கையில் 341,000 வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ
ஷாபு மற்றும் டோயோட்டா அல்பார்ட், புரேடுவா அல்ஸா, டோயோட்டா
வியோஸ் ஆகிய வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

இக்கும்பல் கடந்த இரு மாத காலமாகக் கோலாலம்பூர் வட்டாரத்தில்
தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறிய அவர்,
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஆர்டர்களின் அடிப்படையில்
போதைப் பொருளை விநியோகிக்கும் பணியில் அதன் உறுப்பினர்கள்
ஈடுபட்டு வந்துள்ளனர் என்றார்.

கைது செய்யப்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து
உள்நாட்டினரும் போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான
முந்தைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் அவர்களில் மூவரை போலீசார் தேடி வந்தனர் என்றார் அவர்.


Pengarang :