NATIONAL

கால்பந்தாட்டத்தின் போது மூன்று ஆடவர்களால் நடுவர் தாக்கப்பட்டார்

ஈப்போ, நவ 21 – கால்பந்தாட்ட போட்டியில் நடுவராகப் பணியாற்றிய
ஆடவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். கடந்த
சனிக்கிழமை சித்தியவான், விவசாயத் துறை திடலில் இஸ்கண்டார் புத்ரி
மாநகர் மன்றம் மற்றும் செத்தியு மாவட்ட மன்ற குழுக்களுக்கிடையே
நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்த தாக்குதலில் அரச மலேசிய கடற்படை உறுப்பினரான அந்த 27
வயது நடுவர் இடுப்பு மற்றும் காலில் காயங்களுக்குள்ளானதாக மஞ்சோங்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது நோர்டின் அப்துல்லா
கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த நடுவர் அறிவித்த போட்டியின் முடிவுகள் மீது
செத்தியு மாவட்ட மன்ற குழுவினர் அதிருப்தி கொண்ட நிலையில் மூன்று
ஆடவர்கள் அந்நடுவரை சரமாரியாகத் தாக்கினர் என்ற அவர் நேற்றிவு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் காயமடைந்த சம்பந்தப்பட்ட நடுவர் கடந்த சனிக்கிழமை
இது குறித்து போலீசில் புகார் செய்ததோடு மருத்துவமனையில் சிகிச்சைப்
பெற்றார் என்றார் அவர்.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்
323வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாகக் கூறிய அவர், இப்பிரிவின் கீழ் குற்றவாளி என
நிரூபிக்கப்படுவோருக்கு ஓராண்டு வரையிலான சிறை மற்றும் 2,000
வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றார்.

போலீசாரின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு இந்த சம்பவம்
தொடர்பில் எந்த ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என பொது
மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :