SELANGOR

மலிவு விற்பனை திட்டம் மக்களுக்கானது- உள்ளூர் வணிகத்தைப் பறிக்கும் நோக்கிலானது அல்ல

ஷா ஆலம், நவ 23 – மாநில அரசின் ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனைத் திட்டம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. உள்ளூர் வணிகர்களின் வர்த்தக வாய்ப்பை பறிப்பது இதன் நோக்கமல்ல என்று சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்களை சந்தையை விட குறைவான விலையில்
விற்பனை செய்யும் இந்த மலிவு விற்பனைத திட்டம் சிறுவணிகர்களின்
லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சி உறுப்பினரின்
குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் விவசாயத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் இவ்வாறு கூறினார்.

தொடக்க காலம் தொட்டு இது ஒரு இடையீட்டுத் திட்டமாக
அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. முட்டையில் தொடங்கிய இந்த வர்த்தகம்
கோழி, சமையல் எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசியப்
பொருள்களுக்கு விரிவாக்கம் கண்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய தேவைகளைக் கருத்தில்
மக்களுக்கு உதவுவதை தவிர வேறு நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்த
திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அபரிமித ஆதரவு கிடைத்து
வருகிறது என்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இடத்திலும் மலிவு விற்பனை காலை 10.00 மணிக்கு
தொடங்கும் நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மக்கள்
வரிசையில் காத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து இடங்களிலும்
பெரும்பாலும் எல்லா பொருள்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றார்.

முன்னதாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நடத்தப்படும்
இத்தகைய மலிவு விற்பனைகளால் குறைந்த லாபத்தை ஈட்டி வரும்
உள்நாட்டு வர்த்தகர்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுவதாகச் சுங்கை பூரோங் உறுப்பினர் முகமது ஜம்ரி முகமது ஜைனுடின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விற்பனைகளின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்
கூப்பன்கள் காலை 8.30 மணிக்கே தீர்ந்து விடுவதைச் சுட்டிக்காட்டிய பாஸ்
கட்சி உறுப்பினரான அவர், இந்த கூப்பன்களை வழங்குவதில் பாகுபாடு
காட்டப்படுகிறதா என வினவினார்.


Pengarang :