NATIONAL

சீன, தமிழ்ப்பள்ளிகள் சட்டபூர்வமானவையே! மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைச்சர் சிவகுமார் வரவேற்பு

புத்ரா ஜெயா, நவ 23- சீன, தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் (SJK) சட்டப்பூர்வமானவை மற்றும் மலேசிய அரசியலமைப்பால்  தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இன்று காலை அப்பீல் நீதிமன்ற நீதிபதி சுபாங் லியான் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, மலேசிய இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு கவுன்சில் (மாப்பிம்)  மற்றும் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஒருமனதாக நிராகரித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், தாய்மொழிப்பள்ளிகள் அரசியல் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்ற தொடுத்த  வழக்கை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் சீன தாய்மொழி பள்ளிகளை மத்திய அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் மனுவை இன்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அப்பீல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெரிதும் வரவேற்பதாக மனிதவள அமைச்சர்
வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

இந்த தீர்ப்பின் வழி மலேசிய திருநாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தாய்மொழி பள்ளிகளுக்காகப்  போராடிய அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.


Pengarang :