NATIONAL

நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையில் தென்கிழக்காசியாவில் மலேசியா முதலிடம்

ஷா ஆலம்,  நவ 23 – தென்கிழக்காசியாவிலே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக மலேசியா விளங்குகிறது. கடந்த 2011ஆம் ஆண்டில்  11.2 விழுக்காடாக இருந்த நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை  2019 ஆம் ஆண்டில் 18.3 விழுக்காடாக அபரிமித அதிகரிப்பைக் கண்டுள்ளது

இந்த எண்ணிக்கை சிகிச்சைக்கான செலவினத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய  சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா, தொற்றா நோய்களுக்கான செலவினத்நில் 50 விழுக்காட்டுத் தொகை நீரிழிவு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

தொற்றா நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்கப்படும் தொகையின் மதிப்பு  965 கோடி வெள்ளியாகும். இது மலேசியாவின் மொத்த சுகாதாரச் செலவில் 16.8 சதவீதமாகும் என்று அவர் சொன்னார்.

அதே சமயம், நீரிழிவு நோய்க்கான மொத்த செலவு 438  கோடி வெள்ளியாக உள்ளது. இது தொற்றா நோய்களுக்கான செலவினத்தில் 45.38 விழுக்காட்டை உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.

மக்களவையில் இன்று  தொற்றா நோய்களுக்கு, குறிப்பாக நீரிழிவு நோய்க்கு செய்யப்படும் செலவு குறித்து பண்டார் கூச்சிங் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் டாக்டர்  கெல்வின் ரீ லீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாக சுகாதார அமைச்சு சர்க்கரை பயன்பாடு தொடர்பான பிரசாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக டாக்டர் ஜாலிஹா மேலும் தெரிவித்தார்.

இந்த முயற்சியானது அனைத்து வயதினரையும் இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார். மேலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக அங்காடி வியாபாரிகள் சங்கங்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளையும் தமது தரப்பு நடத்தும்  என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :