NATIONAL

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வெ.5,140 கோடி மதிப்புள்ள செம்பனை எண்ணெய் ஏற்றுமதி

கோலாலம்பூர், டிச 1- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில்  5,140 கோடி வெள்ளி மதிப்பிலான  1 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரம்  டன் செம்பனை எண்ணெயை  மலேசியா ஏற்றுமதி செய்துள்ளது   என்று தோட்டத்தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் பத்து முக்கிய இறக்குமதி நாடுகளுக்கு  3,146 கோடி வெள்ளி மதிப்பிலான  77 கோடியே 90 லட்சம்  டன் செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அது கூறியது.

இந்த பத்து மாத காலக்கட்டத்தில்   மலேசியாவின் முக்கிய செம்பனை எண்ணெய் இறக்குமதி  நாடாக இந்தியா விளங்கியது. இந்தியாவிற்கான செம்பனை எண்ணெயின் ஏற்றுமதி மதிப்பு மற்றும் அளவு 887  கோடி வெள்ளி மதிப்பிலான 22 லட்சத்து 28 ஆயிரம் டன்கள் ஆகும்.

இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக விளங்கும் சீனா 442 கோடி வெள்ளி மதிப்பிலான  11 லட்சத்து 40 ஆயிரம் டன் எண்ணெயை  கொள்முதல் செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 371 கோடி வெள்ளி மதிப்பிலான   85 லட்சம் டன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் வழங்கிய  பதிலில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த பதில் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மலேசியாவின் செம்பனை எண்ணெயை  வாங்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் மற்றும்  உலகளவில் செம்பனை எண்ணெயின் விற்பனையை ஊக்குவிக்க அமைச்சு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து  தோட்டத் தொழில்  மற்றும் மூலப்பொருள் பொருள் அமைச்சரிடம் செனட்டர் டத்தோ நுயிங் ஜெலூயிங் கேள்வியெழுப்பியிருந்தார்.

மலேசிய செம்பனை வாரியத்தின் (எம்.பி.ஓ.பி.) கடந்த மூன்று வருட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, கென்யா, ஜப்பான், பாகிஸ்தான், தென் கொரியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற முக்கிய சந்தைகளுக்கு மலேசியா அதிக அளவு செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது என அமைச்சு கூறியது.


Pengarang :