ANTARABANGSA

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- காஸாவில் 60 விழுக்காட்டு வீடுகள் நாசம், 26 மருத்துவமனைகள் முடக்கம்

காஸா நகர், டிச 1- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட
கோரத் தாக்குலில் காஸா தீபகற்பத்தில் உள்ள 60 விழுக்காட்டுக்கும்
மேற்பட்ட வீடுகள் நிர்மூலமானதாகக் காஸா அரசாங்கத்தின் ஊடக
அலுவலகம் கூறியது.

இஸ்ரேலிய படைகள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை அழித்துள்ளதால்
பொது மக்கள் குறிப்பாக காஸா பிரதேசம் மற்றும் வட காஸாவில்
உள்ளவர்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை
எதிர்நோக்கியுள்ளதாக அந்த ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி
அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

குண்டு வீச்சுத் தாக்குதல், ஆக்கிரமிப்பு அல்லது நிர்மூலமாக்கும்
நடவடிக்கை காரணமாக 26 மருத்துவமனைகளும் 55 சுகாதார
மையங்களும் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோரின் சடலங்கள்
சிக்கியுள்ளன. அப்பகுதிகள் ஆக்கிரமிப்பு படையினரால்
முற்றுகையிடப்பட்டது மற்றும் போதுமான அளவு இயந்திரங்கள் அல்லது
எரிபொருள் இல்லாதது ஆகிய காரணங்களால் அச்சடலங்களை மீட்க
இயவில்லை.

சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு
தினசரி 10 லட்சம் லிட்டர் எரிபொருளும் உதவிப் பொருள்களை கொண்டுச்
செல்வதற்கு 1,000 டிரக்குகளும் தேவைப்படுவதாக அந்த ஊடக அலுவலகம்
தெரிவித்தது.

இருப்பிடங்களை இழந்துள்ள சுமார் பத்து லட்சம் குடும்பங்களுக்கு
உதவுவதற்கான செயல்திட்டங்களை விரைந்து வரையும்படி அரபு லீக் மற்றும் ஒ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய மாநாட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


Pengarang :