SELANGOR

தமிழ்ப் பள்ளிகளுக்கு வெ.50 லட்சம், ஆலயங்களுக்கு வெ.20 லட்சம்- மாநில அரசின் மானியம் அடுத்தாண்டும் தொடரும்

பெட்டாலிங் ஜெயா, டிச 1 – அடுத்தாண்டிற்கான சிலாங்கூர் மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளியும் இந்து ஆலயங்களுக்கு சுமார் 20 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த நிதி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, இந்த மானியத்திற்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்றார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை மறுத்த அவர், கடந்த ஆண்டுகளைப் போல் அடுத்தாண்டிலும் இந்த மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

மானியம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவது வெறும் வதந்தி என்பதால் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குள்ள டாமன்சாரா டாமாய் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இங்கு நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 98 தமிழ்ப்பள்ளிகளுக்கு நாம் 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளோம். இந்து ஆலயங்களுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்த மானியங்களுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும்.

முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அமல் செய்த திட்டங்கள் தொடரப் படுவதை நான் உறுதி செய்வேன் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 12ஆம் தேதி  மாநில சட்டமன்றத்தில் மந்திரி பெசார் தாக்கல் செய்த 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கான மானிய ஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப் படாதது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் எழுந்த ஐயப்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில்  பாப்பாராய்டு இத்தகவலை வெளியிட்டார்.


Pengarang :