NATIONAL

உலு சிலாங்கூர் தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டம்- ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சுடன் பேச்சு

உலு சிலாங்கூர், டிச 4 – உலு சிலாங்கூர் தொகுதியிலுள்ள ஐந்து
தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை
அமல்படுத்துவது தொடர்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகப்
பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சுடன் அண்மையில்
சந்திப்பினை நடத்தினர்.

புக்கிட் தாகார், நைகல் கார்டனர், சுங்கை திங்கி, மின்யாக் தோட்டம்,
மேரித் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களில் வசிக்கும் பாட்டாளிகளுக்கு
மக்கள் குடியிருப்பு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க அரசாங்கம்
ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அத்திட்ட அமலாக்கத்தில்
ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு
நடத்தப்பட்டது.

வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு
ஊராட்சி மன்ற அமைச்சின் திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளர்
அமீர் ஓன் முஸ்தாபா தலைமையேற்ற வேளையில் தோட்டத்
தொழிலாளர்களின் சார்பாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய
பிரகாஷ் நடராஜனைப் பிரதிநிதித்து உலு சிலாங்கூர் நகராண்மைக்
கழகத்தின் உறுப்பினர் ப.புவனேஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த சந்திப்பில் மேம்பாட்டு நிறுவனமான பெர்ஜெயா
கார்ப்ரேஷன் பெர்ஹாட் பிரதிநிதிகள், பி.எஸ்.எம்.கட்சியின் அருள்செல்வன்,
கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதிகள் மற்றும் தோட்டத்
தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட ஐந்து தோட்டங்களில் வேலை செய்வோர் பணி ஓய்வு பெறும் போது தோட்ட குடியிருப்புகளை காலி செய்யும்படி அதன் நிர்வாகம் நிர்பந்தித்து வரும் நிலையில் அவர்களுக்கென வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்ததாக புவனேஸ்வரன் கூறினார்.

இதன் அடிப்படையில் அந்த ஐந்து தோட்டங்களின் உரிமையாளரான
பெர்ஜெயா கார்ப்ரேஷன் பெர்ஹாட் நிறுவனம் தொழிலாளர் வீடமைப்புத்
திட்டத்தை உருவாக்குவதற்காக 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு
செய்திருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலத்தில் வீடமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சு வீடுகளை
நிர்மாணித்து தர வேண்டிய நிலையில் சம்பந்தப்பட்ட நிலம் வீடுகளை
அமைக்க உகந்தது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் இந்த
வீட்டுடமைத் திட்ட அமலாக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒவ்வோராண்டும் வேலையிருந்து ஓய்வு பெறும்
தொழிலாளர்களை வீடுகளைக் காலி செய்யும்படி தோட்ட நிர்வாகம்
நிர்பந்தித்து வரும் காரணத்தால் இவ்விவகாரத்தைத் தாங்கள் அமைச்சின்
கவனத்திற்குக் கொண்டுச் சென்றதாகப் புவனேஸ்வரன் சொன்னார்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு மாற்று நிலம் வழங்க பெர்ஜெயா
நிறுவனம் வாய்மொழியாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் அந்த நிலம்
மற்றும் பொருளாதார திட்டமிடல் பிரிவின் நிதி ஒதுக்கீடு தொடர்பான
ஆய்வுக்குப் பின்னர் இந்த வீடமைப்புத் திட்டத்தின் அடுத்தக் கட்ட
நடவடிக்கை குறித்து இம்மாதம் 15ஆம் தேதிக்குள் தாங்கள் பதில்
அளிப்பதாக அமீர் ஓன் தங்களிடம் வாக்குறுதியளித்துள்ளதாக அவர்
கூறினார்.


Pengarang :