NATIONAL

போக்குவரத்துக் குற்றங்களுக்கு 50% வரை அபராதக் கழிவு- காவல் துறை அறிவிப்பு

கோலாலம்பூர், டிச 5- புக்கிட் ஜாலில் தேசிய அரங்க வளாகத்தில் இம்மாதம்  8 முதல் 10 வரை நடைபெறும் “மடாணி அரசாங்கத்துடன் ஒரு வருடம்” எனும் நிகழ்ச்சியையொட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கு  50 சதவீத அபராதக் கழிவைக் காவல்துறை வழங்கவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான போக்குவரத்துக் குற்றங்கள், கைது வாரண்ட் ,  இன்னும் விசாரணையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்க முடியாத குற்றங்கள் ஆகியவை இந்த சலுகையில் உள்ளடங்காது என்று புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அகமது சப்ரி கூறினார்.

வாகனமோட்டிகள் தங்கள் அபராதத் தொகையை டிசம்பர் 8 ஆம் தேதி (வெள்ளி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் உள்ள  உள்ள சோதனை மற்றும் கட்டண முகப்பிடங்களில் மட்டுமே செலுத்த முடியும் என அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நெரிசலைத் தவிர்ப்பதற்கும் அபராதம்  செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக  அபராதம் செலுத்தும்  முகப்பிடத்திற்குச் செல்வதற்கு முன் பி. டி. ஆர்.எம். அகப்பக்கம்  அல்லது MyBayar செயலியில் தங்களுக்கு ஏதேனும் சம்மன் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.


Pengarang :