இந்திய சமுதாய சிறப்பு அதிகாரியாக   மீண்டும் டாக்டர் குணராஜ்

செய்தி சு.சுப்பையா

செந்தோசா.டிச.10-  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியின் சிறப்பு இந்திய சமுதாய அதிகாரியாக செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் மீண்டும் நியமிக்கப் பட்டார். இந்த  அறிவிப்பை மந்திரி புசார்  நேற்று. தீபாவளி உபசரிப்பில்  வெளியிட்டார்.

செந்தோசா சட்டமன்றத்தின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கோலாகலமாக செந்தோசாவில் நடைபெற்றது. இந்த சிறப்பு உபசரிப்பு நிகழ்ச்சிக்கு  டாக்டர் குணராஜ்  ஏற்பாடு   செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தலைமை தாங்கினார்.
தலைமை உரை ஆற்றிய பொது இந்த நியமனத்தை அறிவித்தார். டாக்டர் குணராஜ் கடந்த தவணையும் மந்திரி புசாரின் சிறப்பு இந்திய அதிகாரியாக 5 ஆண்டுகள் சேவையாற்றினார்.

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலில்  டாக்டர் குணராஜ்   மீண்டும் செந்தோசா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். 46,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி வாகை சூடினார்.

இந்த மகத்தான வெற்றிக்கு பிறகு மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் இந்திய பிரதிநிதியாக குணராஜ் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற குரல் கடுமையாக எழுந்தது. ஆனால் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் விடுபட்டது. இதனால் சிலாங்கூர் மாநில மக்கள் நீதிக் கட்சியின் இந்திய தலைவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கடந்த 2 தவணையாக மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் இந்திய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை.

இப்போது 3 வது தவணையாக மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் இந்திய சமுதாய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.  மந்திரிபுசாரின் இந்த அறிவிப்பு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.


Pengarang :