NATIONAL

கணக்காளர் இறப்பு  ஒரு கொலையாக  இருக்கலாம் – சந்தேகம்

கோலாலம்பூர், டிச 12: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர்  ஜாலான் குவாரி, கம்போங் செராஸ் பாருவின் அருகில் நேற்று இறந்து கிடந்தது ஒரு கொலையாக  இருக்கலாம்.

நேற்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள்  அளித்த தகவலின் பின் 28 வயதுடைய   இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது என செராஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறினார்.

“பலியானவரின் உடலில் பல காயங்கள் இருப்பது காவல்துறையின் முதல் கட்ட சோதனையில் கண்டறியப்பட்டது. மேலும், உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, செராஸ், கோலாலம்பூருக்கு அனுப்பப்பட்டது.

“பாதிக்கப்பட்டவரின் அடையாள ஆவணம் எதுவும் கிடைக்காத  நிலையில்,  குடும்பத்தினரால் அந்த நபரின் அடையாளம் காணப் பட்டது,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 302 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் செராஸ் காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 03-9284 5050/ 5051, கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

– பெர்னாமா


Pengarang :