NATIONAL

போலீஸ் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு-  விபத்து தொடர்பான விசாரணை வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது

கோலாலம்பூர், டிச. 18 – ஈப்போ, மேருவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஐந்தாவது படிவ மாணவர் சம்பந்தப்பட்ட  மரண விபத்தில் தொடர்புடையவர் கருதப்படும் மூத்த போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கைப் பதிவு செய்ய சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் செய்த  முடிவு காவல்துறை வெளிப்படைத்தன்மையைக் காட்டுகிறது.

துணை சூப்ரிண்டெண்டன் (டி.எஸ்.பி.) பதவி வகிக்கும் அந்த அதிகாரியை  குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ்  இன்று குற்றஞ்சாட்டுவதற்கு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை,  விரிவான விசாரணை மூலம்  பெறப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது  என்று   தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன்   கூறினார்.

மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட   எந்த ஒரு கிரிமினல் வழக்கையும் விசாரிப்பதில் காவல்துறையின் வெளிப்படைத்தன்மையை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்த  விசாரணையை மாநில காவல்துறைத் தலைவரும் மற்றும் ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவரும்  சிறந்த மற்றும் நம்பகமான புலனாய்வுக் குழுவைக் கொண்டு நடத்தினார்கள் என்று அவர் தெரிவித்தார்.

எந்தவொரு உறுப்பினர் அல்லது அதிகாரி  குற்றத்தை செய்தாலும்  சமரசத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நான் இருக்கிறேன். மேலும் போலீஸ் படையின்   நற்பெயரைப் பாதுகாக்க நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வேன் என்றார் அவர்.

இன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன்  அந்த  மூத்த அதிகாரி பணியிடை நீக்கம்  செய்யப்படுவார் என்று கூறிய அவர், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திலிருந்து அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பாதுகாப்புப் படையில் உள்ள ஒவ்வொரு பணியாளர்களும் காவல் துறையின் நற்பெயரை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். குற்றச் செயல்களைச் செய்யும்போது காவல்துறையின் சின்னத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.

ஈப்போ, மேருவில் உள்ள  தேசிய இடைநிலைப் பள்ளி அருகே போலீஸ் உயர் அதிகாரியின் கார்  மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 17 வயது மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Pengarang :