NATIONAL

பள்ளி மாணவர் மரணம்- போலீஸ் உயர் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போ, டிச 18 – இடைநிலைப் பள்ளி மாணவர் மரணமடைந்தது தொடர்பில்
போலீஸ் உயர் அதிகாரி மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மாஜிஸ்திரேட் எஸ்.புனிதா முன்னிலையில் முகமது நஸ்ரி அப்துல் ரசாக்
(வயது 44) என்ற அந்த அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு
உட்பட்டது என்பதால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மணி 12.05க்கும் 12.40க்கும் இடையே ஈப்போ
மேருவில் உள்ள ஜாத்தி தேசிய இடைநிலைப் பள்ளிக்கு அருகே 17 வயதுடைய
மாணவன் ஜஹாரி அப்பாண்டிக்கு மரணம் விளைவித்ததாக டி.எஸ்.பி.
அந்தஸ்து கொண்ட அந்த அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த அதிகாரிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண
தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டன அல்லது 12க்கும் குறையாத பிரம்படி விதிக்க இச்சட்டம்
வகை செய்கிறது.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் (இரண்டாவது) அஸ்லினா
ரஸ்டி, கைருள் அஸ்ரிம் மாமாட், வான் அஸிமா யாக்கோப்,
அஃப்ஜைனிஸாம் அப்துல் அஜிஸ், சைபுல் அக்மால் முகமது சைட்,
நஸ்ருள் ஹாடி அப்துல் கனி, ஜே.எஸ். கீதா, லோவ் கின் ஹூய்
ஆகியோர் வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில்
லோ யாப் லிம் ஆஜராகிறார்.

முகமது நஸ்ரிக்கு ஜாமீன் வழங்க அனுமதி மறுத்த நீதிமன்றம் இந்த
வழக்கு தொடர்பான இரசாயன அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைப்
பெறுவதற்கு ஏதுவாக இதன் மறு விசாரணையை அடுத்தாண்டு பிப்ரவரி
7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த து.


Pengarang :