NATIONAL

சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், டிச 18 – கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்
வேளையில் திரங்கானுவில் நிலைமை சற்று சீரடைந்து வருகிறது.
எனினும், சிலாங்கூர் மற்றும் பேராக்கில் எந்த மாற்றமும் இல்லை.

கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ள 17
துயர் துடைப்பு மையங்களில் 1,688 குடும்பங்களைச் சேர்ந்த 5,327 பேர்
நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த
எண்ணிக்கை 1,528 குடும்பங்களைச் சேர்ந்த 4,840 பேராக இருந்தது.

தாமான் மேரா மாவட்டத்தில் 16 துயர் துடைப்பு மையங்களும் பாசீர்
பாஞ்சாங்கில் ஒரு மையமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மாநில
சமூக நலத் துறையின் பேரிடர் மேலாண்மை அகப்பக்கம் கூறியது.

திரங்கானு மாநிலத்தில் உள்ள பத்து நிவாரண மையங்களில் 180
குடும்பங்களைச் சேர்ந்த 812 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு
8.00 மணியளவில் 184 குடும்பங்களைச் சேர்ந்த 824 பேர் அங்கு தங்க
வைக்கப்பட்டிருந்தனர்.

சிலாங்கூ மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி இரு துயர் துடைப்பு
மையங்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் தங்கியுள்ளதாக மாநில
சமூக நலத் துறையின் பேரிடர் அகப்பக்கம் தெரிவித்தது. நேற்றிரவு 11
குடும்பங்களைச் சேர்ந்த 39 அங்கு தங்கியிருந்தனர்.

அவர்கள் பாடாங் ஜாவா தேசிய சமயப் பள்ளியிலும் (23 பேர்) கோல
சிலாங்கூர் பாரிட் மஹாங் தேசிய பள்ளியிலும் (20 பேர்) அடைக்கலம்
நாடியுள்ளனர்.

பேராக் மாநிலத்தில் ஒரே துயர் துடைப்பு மையம் தற்போது செயல்பட்டு
வருகிறது. தெலுக் இந்தான், பாடாங் தேம்பாக் சமூக மண்டபத்தில் செயல்பட்டு வரும் அந்த மையத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :