NATIONAL

திரங்கானுவில் இறுதி  நான்கு  தற்காலிக தங்கும் மையங்களும் மூடப்பட்டன

கோலா திரங்கானு, டிச 19: திரங்கானுவில் உள்ள மூன்று மாவட்டங்களில், செயல் பட்ட நான்கு  தற்காலிக தங்கும் மையங்களும் (பிபிஎஸ்) இன்று மதியம் 1 மணிக்கு இறுதியாக  மூடப்பட்டன. எனவே, மாநிலம் வெள்ளத்தின் இரண்டாவது அலையில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது.

அவை பலாய் ராயா கம்போங் பெலண்டாங், டுங்குன், சுராவ் கம்போங் நியாதோ, செத்தியு, பெங்கலான் பெரங்கான் தேசியப் பள்ளி மற்றும் மெர்சாங் இடைநிலைப்பள்ளி, மராங் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்ட நான்கு தற்காலிகத் தங்கும் மையங்கள் ஆகும் என திரங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.

16 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 158 பேர் பாதிக்கப் பட்டனர்.  இன்று நீர் முழுவதும் வடிந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மராங், உலு திரங்கானு, டுங்குன், செத்தியு, பெசுட் மற்றும் கெமாமன் ஆகிய ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டன. இதனால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவடையாததால், அடுத்த வெள்ள அலையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாக திரங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :