NATIONAL

தொடர் மழை எச்சரிக்கை- பேரிடர் மேலாண்மை குழுக்களை தயார் நிலையில் வைக்க நட்மா உத்தரவு

கோலாலம்பூர், டிச 20 – நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யலாம் என்ற வானிலை ஆய்வு மையத்தின்    எச்சரிக்கையைத் தொடர்ந்து  மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் மாவட்ட  மேலாண்மைப் பிரிவுகளை தயார் நிலையில் வைக்க  தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தங்கள் தயார் நிலையை அதிகரிக்கக் கோரும் பேரிடர் தயார் நிலை அறிக்கையை   நட்மா நேற்று வெளியிட்டது.

ஒவ்வொரு வெள்ள நிவாரண மையமும் முறையான வசதிகளைக் கொண்டிருப்பதும்  அனைத்து கட்டுப்பாட்டுச் சாவடிகளிலும் போதுமான மீட்பு உபகரணங்கள் இருப்பதும் அவை நல்ல நிலையில் உள்ளதும்  உறுதி செய்ய வேண்டும் என்று அது கூறியது.

தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம்  மூலம் நிலவரங்களை  நட்மா தொடர்ந்து கண்காணிக்கும் அதே வேளையில்  பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து  தொழில்நுட்ப தகவல் அளவீடுகளையும் தொடர்ந்து மதிப்பீடு செய்யும்.

வெள்ளப் பேரிடர் தொடர்பானத் தகவல்களை 03-80642400 என்ற தொலைபேசி  எண்,  03-80642429 என்ற தொலைநகல் எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பெற நட்மா எப்போதும் தயாராக உள்ளது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரொம்பின், பகாங் மற்றும் ஜோகூரில் உள்ள சில பகுதிகளான குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் நாளை வரை  தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Pengarang :