NATIONAL

மூன்றாவது வெள்ள அலையை எதிர்கொள்ளத் தயாராவீர்- திரங்கானு மக்களுக்கு அறிவுறுத்து

கோல திரங்கானு, டிச 20 – இம்மாதம் 22 முதல் 26 வரை மூன்றாவது
வெள்ள அலை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதால் திரங்கானு மக்கள்
குறிப்பாகக், கடலோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி
வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றியுள்ள ஜெலாவாட் வெப்ப மண்டலச்
சூறாவளி மாநிலத்தையும் தாக்கும் சாத்தியம் உள்ளதால் இந்த எச்சரிக்கை
விடுக்கப்படுவதாக மாநில அரசு செயலாளர் டத்தோ தெங்கு ஃபாரூக்
ஹூசேன் கூறினார்.

இந்த சூறாவளியின் தாக்கம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் நாம் கனத்த
மழையை எதிர் கொள்ள வேண்டி வரும். இத்தகைய சூழல்களில் பலத்த
மழை மட்டுமின்றி காற்றும் பலமாக வீசும். ஆகவே, பெசுட் தொடங்கி
கெமமான் வரை கடலோரங்களில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன்
இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என அவர் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள சமூக நலத் துறை
அலுவலகத்தில் நிவாரணப் பொருள்களை வழங்கும் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தச் சுற்று வெள்ளப் பேரிடர் சாத்தியத்தை எதிர்கொள்ள மாநில அரசு
தயாராக உள்ளதாக மாநில வெள்ள பேரிடர் மேலாண்மை செயல்குழுவின்
செயலாளருமான அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழையின் போது நாம் வெள்ளத்தை எதிர்கொள்ள
தயாராக இருப்போம். வானிலைத் ஆய்வுத் துறையின் கணிப்பின் படி
ஜெலாவாட் வெப்பமண்டலச் சூறாவளி கிழக்குக் கரை மாநிலங்களை
மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியாவையும் தாக்கும் என அஞ்சப்படுகிறது
என்றார் அவர்.


Pengarang :