ANTARABANGSA

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் வரலாற்றில் 2023ஆம் ஆண்டு மிகக் கொடிய அத்தியாயம்

நியுயார்க், டிச 20: இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடி வரலாற்றில் மிகக்
கொடிய அத்தியாயமாக 2023ஆம் ஆண்டு விளங்குகிறது
என்று மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளுக்கான ஐ.நா.வின் சிறப்புத்
தூதர் டோர் வென்னஸ்லண்ட் கூறினார்.

அனைத்து முனைகளிலும் நிலைமை மோசமடைந்து வருவதாக மத்திய
கிழக்கு குறிப்பாகப் பாலஸ்தீனம் மீதான ஐ.நா. பாதுகாப்பு மன்றக்
கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறினார்.

காஸா பகுதி முழுவதும் நிலவி வரும் மோசமான மனிதாபிமான நிலை
தொடர்பான அவரின் கருத்தும் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்ததாக
பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.

அப்பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஏறக்குறைய
சாத்தியமற்றச் சவாலாகவே உள்ளது. இடப் பெயர்வுக்கு மத்தியில்
ஏற்பட்டுள்ள பேரழிவு கற்பனைக்கு எட்டாத வகையில் இருக்கிறது.
மனிதாபிமான உதவி முற்றாகச் சீர்குலைந்து விட்டது என்று அவர்
மேலும் சொன்னார்.

பெண்கள் மற்றும் சிறார்கள் உள்பட சிவிலியன்கள் கொல்லப்படுவதை
அவர் வன்மையாகச் சாடினார். இந்த போரில் 131 ஐ.நா. பணியாளர்கள்
உள்பட எண்ணற்ற சிவிலியன்கள் கொல்லப்பட்டது குறித்து நான் மிகவும்
வருந்துகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலத்தில் நிலைமை
மோசமடைந்து வருவது குறித்தும் அவர் தனது ஆழ்ந்த கவலையைப்
வெளிப்படுத்தினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மற்றும் இஸ்ரேலில் உள்ள
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக பயங்கரத் தாக்குதல்களை
நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :