NATIONAL

ஜொகூரில் கனமழை தொடர்ந்து பெய்யும்- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 4 – இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஜோகூர் மாநிலத்தின் பல பகுதிகளில் கனத்த மழை தொடர்ச்சியாக பெய்யும் என்ற கடும் நிலையிலான எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய பகுதிகள் இந்த கடுமையான வானிலை நிலவும் என்று அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

மேலும், பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும் ஜோகூரின் பத்து பஹாட், பொந்தியான் ஆகிய இடங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை தொடர்ச்சியான மழைப் பொழிவு இருக்கும் என்ற விழிப்பு நிலையிலான எச்சரிக்கையையும் அது விடுத்துள்ளது.

இதனிடையே, பெர்லிஸ் மாநிலத்தின் சுங்கை ஆராவ் மற்றும் கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸில் உள்ள சுங்கை கிளந்தானில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதாக தேசிய பேரிடர் நிறுவனம் (நட்மா) வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை தொடர்பான சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் அல்லது நிலச்சரிவு காரணமாக 19 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. டுங்குனில் உள்ள ஜாலான் டுரியான் மெந்தாங்காவ், ஜெலி, ஜாலான் சுங்கை சாம், மேற்கு கரை சாலையின் குப்பாங்-கிரீக்-ஜெலி-உலு பேராக்- சாலை மற்றும் ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி-குளுவாங் சாலைஆகியவை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளாகும்.


Pengarang :