NATIONAL

வருமானம் ஈட்டுவது நோக்கமல்ல- சிறந்த சேவையை வழங்கவே குடிநீர்க் கட்டண உயர்வு- ஸ்பான் விளக்கம்

கோலாலம்பூர், ஜன 5 – இவ்வாண்டில் அமல்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படும் குடிநீர்க் கட்டண மறுசீரமைப்பு, நிலையான சேவையை
உறுதி செய்வதே தவிர, அதிகப்படியான வருமானத்தை ஈட்டுவதை
நோக்கமாக கொண்டது அல்ல என்று தேசிய நீர் சேவை ஆணையம்
(ஸ்பான்) தெரிவித்துள்ளது.

இந்த குடிநீர்க் கட்டண மறுசீரமைப்பு நீர் சேவை நிறுவனங்களுக்கும்
பயனீட்டாளர்களுக்கு நியாயமானதாக இருப்பதை உறுதி செய்ய கட்டண
நிர்ணயிப்பு செயல்முறை மீதான ஆய்வினை ஸ்பான் மேற்கொண்டு
வருகிறது என்று அதன் வர்த்தக தொடபு மற்றும் பயனீட்டாளர் விவகாரப்
பிரிவு இயக்குநர் முகமது ஃபாசில் இஸ்மாயில் கூறினார்.

நிறுவனத்தின் நடவடிக்கைச் செலவினம் மற்றும் மூலதனச்
செலவினத்தைக் கருத்தில் கொண்டு எவ்வளவு கட்டணத்தை நிர்ணயிக்க
வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்வோம். நீர் சேவை வழங்குநர்கள்
இந்த முடிவை எடுக்க மாட்டார்கள் என அவர் சொன்னார்.

பெர்னாமா தொலைக்காட்சியில் நேற்றிரவு இடம் பெற்ற 2024ஆம்
ஆண்டிற்கான குடிநீர்க் கட்டண மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில்
கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

குடிநீர்க் கட்டணம் இவ்வாண்டு உயர்த்தப்பட்டால் ஒவ்வொரு பில்லுக்கும்
கூடுதலாக 3.00 வெள்ளியை கட்டணமாகச் செலுத்த வேண்டிய வகையில்
இந்த மறுசீரமைப்பு அமையும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு பயனீட்டாளர்கள் மாதம் 20 வெள்ளியை
குடிநீர்க்கட்டணமாக செலுத்தி வந்தால், இனி அவர்கள் 23 வெள்ளியைச்
செலுத்த வேண்டி வரும். நாளொன்றுக்கு 10 காசு மட்டுமே
அதிகரிப்படுவதை இது காட்டுகிறது. இது மிகவும் குறைந்தபட்ச
அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்தார்.

தற்போது அமலில் உள்ள கட்டணம் மிகவும் குறைவானதாக உள்ளதால்
பழைய குழாய்கள் உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயலாத
நிலையில் நீர் விநியோக நிறுவனங்கள் உள்ளன என்று அவர் சொன்னார்.


Pengarang :