NATIONAL

2024ஆம் ஆண்டில் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்ய புக்கிட் அமான் சி.சி.ஐ.டி. திட்டம்

கோலாலம்பூர், ஜன 5- வர்த்தகக் குற்றங்கள் தொடர்பில் அதிகமான
வழக்குகளைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக விசாரணை முறையை
வலுப்படுத்துவது உள்ளிட்ட மூன்று இலக்குகள் மீது புக்கிட் அமான்
வர்த்தக குற்றப்புலனாய்த் துறை (சி.சி.ஐ.டி.) இவ்வாண்டில் கவனம்
செலுத்தவுள்ளது.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது
மற்றும் விசாரணை அதிகாரிகளின் அறிவாற்றலைப் பெருக்குவது ஆகிய
அம்சங்கள் மீதும் இவ்வாண்டில் கவனம் செலுத்தப்படும் என்று அதன்
இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

வர்த்தக குற்றங்களில் பல புதிய பாணிகள் மற்றும் யுக்திகள்
உருவெடுத்துள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்கும்
நோக்கில் இந்த மூன்று இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர்
சொன்னார்.

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக புதிய
இலக்கவியல் செயலிகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால்
குற்றச்செயல்களின் பாணியும் மாறியுள்ளது. இந்த பிரச்சனை
மலேசியாவுக்கு மட்டுமின்றி இதர வளர்ந்த நாடுகளுக்கும் தலைவலியாக
உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில்லை என்பது
அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

ஆகவே, வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையில் உள்கட்டமைப்பை
சீரமைப்பது சமீபத்திலும் எதிர்காலங்களிலும் நிகழக்கூடிய வர்த்தக
குற்றங்களை எதிர் கொள்வதற்குரிய சிறந்த அணுகுமுறையாக விளங்கும்
என்றார் அவர்.

முறையான பயிற்சிகள் வாயிலாக வர்த்தக குற்றப்புலனாய்வு அதிகாரிகள்
தங்களின் அறிவாற்றலையும் திறனையும் அதிகரித்துக் கொள்வது
அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :