SELANGOR

அடுக்குமாடி குடியிருப்பில் விளக்குகள், மின் கம்பிகளை மாற்றும் பணிக்கு எம்.பி.ஐ. வெ.13,000 நிதியுதவி

உலு லங்காட், ஜன 10- செமினியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் விளக்குகள் மற்றும் மின் இணைப்புக் கம்பிகளை மாற்றுவதற்கு
எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 13,000 வெள்ளியை
ஒதுக்கியுள்ளது.

இந்த பணியை மேற்கொள்வதில் சிலாங்கூர் தொழில் திறன் மேம்பாட்டு
மையத்தின் (எஸ்.டி.டி.சி.) மாணவர்களின் ஒத்துழைப்பு நாடப்பட்டதாக
எம்.பி.ஐ. சமூக பொறுப்புணர்வு மற்றும் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத்
தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

கடந்த மூன்று நாட்களில் சுமார் 80 எல்.இ.டி. விளக்குகள் அங்கு
பொருத்தப்பட்டன. அவை நல்ல நிலையில் செயல்படுவதை உறுதி செய்ய
புதிதாக மின் கம்பிகள் பொருத்தப்பட்டதோடு மின் பகிர்வு பெட்டிகளும்
மாற்றப்பட்டன. இதற்கான மொத்த செலவு 13,000 வெள்ளியாகும் என்று
அவர் சொன்னார்.

தொழில்திறன் மேம்பாட்டு மையத்துடனான ஒத்துழைப்பின் வழி
குத்தகையாளர் நிர்ணயித்த விலையை விட 5,000 வெள்ளியை
இப்பணியில் மிச்சப்படுத்த முடிந்தது என்றார் அவர்.

செமினி, பங்சாபுரி ஸ்ரீ ரிஞ்சிங்கில் உள்ள சி புளோக் குடியிருப்பில்
மேற்கொள்ளப்பட்டு வரும் மின் இணைப்பு பணிகளைப் பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த அணுகுமுறையின் வாயிலாகச் செலவுகளைக் கட்டுப்படுத்த
முடிவதோடு எஸ்.டி.டி.சி. மையத்தின் மாணவர்கள் தங்கள் திறனை
வளர்த்துக் கொள்வதற்குரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது. இதர இடங்களில்
இத்தகைய உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் போது இந்த பாணியைக்
கடைபிடிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என அவர் சொன்னார்.


Pengarang :