NATIONAL

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பில் அனைத்து கோணங்களிலும் விசாரணை- ஐ.ஜி.பி. தகவல்

கோலாலம்பூர், ஜன 11- பேராக், ஆயர் தாவாரில் உள்ள புருவாஸ் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம்மின் வீட்டில் நேற்று
விடியற்காலை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பில்
போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

காவல் படையின் சிறப்புப் பிரிவிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும்
தகவல்களைத் திரட்டுவதும் இதில் அடங்கும் என்று தேசிய போலீஸ்
படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

இந்த சம்பவத்திற்கும் ங்கே முன்பு வெளியிட்ட கருத்துகளுக்கும்
தொடர்புள்ளதா என்பது குறித்தும் தாங்கள் விசாரித்து வருவதாக அவர்
தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் யாரேனும் கைது செய்யப்பட்டப் பின்னரே அவர்
வெளியிட்டிருந்த கருத்துக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாக
என்பதை அறிந்து கொள்ள முடியும் என பெர்னாமாவுக்கு அளித்த
பேட்டியில் அவர் சொன்னார்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆயர் தாவார் வட்டார மக்களுக்கும்
எந்த பிரச்சனையும் இருந்ததில்லை என்பதும் உளவுப் பிரிவின்
விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று
வருவதால் இது குறித்து எந்த ஆருடங்களையும் வெளியிட வேண்டாம்
என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ங்கே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டச் சம்பவத்தில் தொடர்புடையத்
தரப்பினரைக் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக
ஈடுபட்டு வருவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
யுஸ்ரி ஹசான் பாஸ்ரி முன்னதாகக் கூறியிருந்தார்.

நேற்று விடியற்காலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவ்வீட்டின் வாசலில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.


Pengarang :