NATIONAL

சட்டவிரோத நடவடிக்கைகள் வழி வெ.11.6 கோடி பெற்றதாக முன்னாள் இயக்குநர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன 11 – சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் 11 கோடியே
60 லட்சம் வெள்ளியைப் பெற்றதாக நிறுவனம் ஒன்றின் முன்னாள்
இயக்குநருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று
குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸ்ருள் டாருள் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டு
வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஆங் ஜென் சுயேன் (வயது 33) என்ற
அந்நபர் மறுத்து விசாரணைக் கோரினார்.

பிக்ஸல்வெஸ்ட் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த
போது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட 11 கோடியே 64
லட்சத்து 30 ஆயிரத்து 812 வெள்ளி 43 காசை தனக்குச் சொந்தமான
மூன்று வங்கிக் கணக்குகளில் வைத்திருந்ததாக அவர் மீது நான்கு
குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோத்தா டாமன்சாரா சி.ஐ.எம்.பி. வங்கி, செராஸ், தாமான் மிடா அஃப்பின்
வாங் முதலீட்டு வங்கி, ஜாலான் ராஜா சூலான் எம் முதலீட்டு வங்கி
ஆகியவற்றில் கடந்த 2020 டிசம்பர் 1 மற்றும் 2022 ஜூலை 7 ஆகிய
தேதிகளுக்கு இடையே இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணபரிவர்த்தனை எதிர்ப்பு, பயங்கரவாத
நிதியளிப்பு எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத முறையில் பொருளீட்டல்
சட்டத்தின் 4(1)(பி) பிரிவின் கீழ் அவர் ஆங்கிற்கு எதிராக வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலாகப்
பெறப்பட்ட பணத்தில் ஐந்து மடங்கு தொகை அல்லது ஐம்பது லட்சம் வெள்ளி அல்லது இவ்விரண்டில் அதிகமானத் தொகை அபராதமாக விதிக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது.


Pengarang :