NATIONAL

நிதி முறைகேடு தொடர்பில் இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு- எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஜன. 11 – முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில்  விளம்பர மற்றும்  பிரசார நடவடிக்கைகளுக்காக  70 கோடி வெள்ளி நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று  உறுதிப்படுத்தியது.

அந்த வாக்குமூலம் நேற்று தலைநகரில் பதிவு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

இதனிடையே,  முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைமா அப்துல் காலிட் மற்றும் அவர்களது இரண்டு மகன்களான முகமது அமீன் ஜைனுடின் மற்றும் முகமது அமீர் ஜைனுடின் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம்  பதிவு செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி. நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்த மூவருக்கும்  சொந்தமான நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள் நாட்டிலும்   வெளிநாடுகளிலும் உள்ள உயர் மதிப்பு கொண்ட சொத்துக்கள் தொடர்பான பல விஷயங்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக  வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் அழைக்கப்பட்டனர்.  இது டாயிமுக்கு எதிரான விசாரணையுடன் தொடர்புடையதாகும்.

2009ஆம் ஆண்டு  எம்.ஏ.சி.சி. சட்டத்தின்  36(1)(a) பிரிவின் கீழ் துன் டாயிமுக்கு நோட்டீஸ் ஒன்று  கடந்த 2023ஆம் ஆண்டு  ஜூன் 7ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது என்பதை எம்.ஏ.சி.சி. தெளிவுபடுத்த விரும்புகிறது.

அதே நேரத்தில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின்   36(1)(b) இன் கீழ் ஒரு அறிவிப்பு அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பண்டோரா ஆவணங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எம்.ஏ.சி.சி.  டாயிமிடம் கடந்த பிப்ரவரி மாதம்  விசாரணையைத் தொடங்கியது. அவரது சொத்துகள் மீதான விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது


Pengarang :