NATIONAL

கிள்ளானில் குடிநுழைவுத் துறை  சோதனை- மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 21 பேர் மீட்பு

புத்ராஜெயா, ஜன 11 –   கிள்ளான் நகரில் கடந்த  திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 21 வங்காளதேச ஆடவர்களை குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் உளவு நடவடிக்கையின் அடிப்படையில் கடை வீடொன்றில்  மாலை 3.30 அளவில் நடத்தப்பட்ட அச்சோதனையில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்துப் பாதிக்கப்பட்ட நபர்களும் மீட்கப்பட்டனர் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர்  டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

நிறுவனம் ஒன்றில் வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட  அவர்கள் அனைவரும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக  நம்பப்படுகிறது. கடந்த  ஆறு மாதங்களாக அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலருக்கு செல்லுபடியாகும் தற்காலிக வேலை அனுமதி அட்டைகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு  முதலாளிகள் ஊதியம் வழங்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களின் கடப்பிதழ்களை  அனுமதியின்றி  முதலாளிகள் தங்கள்வசம் வைத்திருக்கின்றனர் என்று அவர் நேற்று  வெளியிட்ட  அறிக்கை ஒன்றில் கூறினார்.

இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளை தமது துறை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறிய அவர்,  2007ஆம் ஆண்டு  ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.


Pengarang :