NATIONAL

பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி புதிய குடிநீர்க் கட்டணம் அமல்- ஸ்பான் தகவல்

புத்ராஜெயா, ஜன 17- தீபகற்ப மலேசியா மற்றும் லபுவானில் எதிர்வரும்
பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி குடியிருப்புகளுக்குப் புதிய குடிநீர்க் கட்டண
சீரமைப்பு அமலுக்கு வருகிறது என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர்
சேவை ஆணையம் கூறியது.

இந்த சீரமைப்பின் வழி நீர்க் கட்டணம் ஒரு கனமீட்டர் நீருக்கு 22 உயர்வு
காணும். தீபகற்ப மலேசியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் லபுவானில் நீர்க்
கட்டணத்தின் கட்டமைப்பு மற்றும் கூறுகள் தர நிலைப்படுத்தப்பட்ட
கட்டண நிர்ணய செயல்முறையின் கீழ் இந்த கட்டண சீரமைப்பு
அமல்படுத்தப்படுகிறது.

கட்டணத்தை நிர்ணயிப்பதில் சீரான போக்கு நிலவுவதை உறுதி
செய்வதற்காக மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த கட்டண முறை
மறுஆய்வு செய்யப்படுகிறது.

நீண்ட கால அடிப்படையில் நீர் சேவைத் துறையின் நிலைத்தன்மை
பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய நீர் கட்டண உயர்வை இனியும்
தாமதப்படுத்த முடியாது. அவ்வாறு செய்யாவிடில் மக்கள் அனுபவிக்கும்
தரமான நீர் சேவையில் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஸ்பான்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த கட்டண உயர்வும் மிகவும் குறைவானது. கடந்த 2022ஆம் அண்டு
தரவுகளின் படி ஒரு கன மீட்டர் நீரை சுத்திகரிப்பதற்கு வெ.1.75
செலவாகிறது. இந்த செலவினத்தை இனியும் சமாளிக்க இயலாது என
அது கூறியது.

மாநில அரசுகளின் தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த
கட்ட சீரமைப்பு அமல்படுத்தப்படுகிறது. கட்டண உயர்வுக்கு ஏற்ப நீர்
சேவையின் தரம் உயர்த்தப்படுவதை உறுதி செய்யும் பணியை மத்திய அரசு ஸ்பான் வாயிலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :