NATIONAL

பிரேக் பழுதானதால்,  கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆறு வாகனங்கள் மீது மோதியது

தாசெக் குளுகோர், ஜன 22- நேற்று ஜாலான் ஆரா கூடா போக்குவரத்து விளக்கு சந்திப்பில் பிரேக் பழுதானதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ஆறு வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

காலை 11.15 மணியளவில் நடந்த விபத்தின் போது, குறிப்பிட்ட லாரி தாசெக் குளுகோரிலிருந்து கெடாவில் உள்ள லூனாஸ் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பிரேக் பழுதானதால் லாரியின் டிரைவரால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை என்று செபுராங் பிராய் உத்தாரா மாவட்டத்தின் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சித்தி நோர் சலாவத்தி சாட் தெரிவித்தார்.

“போக்குவரத்து விளக்கு சந்திப்பை அடைந்ததும், லாரி டிரைவர் வாகனத்தை மெதுவாக்கினார். ஆனால், பிரேக் செயலிழந்ததால் இடமிருந்து வலமாகச் சென்றார். அச்சமயம் போக்குவரத்து விளக்குகளில் நின்றுகொண்டிருந்த ஆறு வாகனங்கள் மீது லாரி மோதியது.

“ஆறு வாகனங்கள் சேதமடைந்தன, ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை. காரின் ஓட்டுநர் ஒருவர் மட்டுமே காயமடைந்தார், ”என்று சித்தி நோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

– பெர்னாமா


Pengarang :