NATIONAL

லாரி ஒன்று நான்கு கார்கள் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஷா ஆலம், ஜன 22: இன்று காலை கோலா லங்காட்டில் ஜாலான் பந்திங்-டெங்கில், சுங்கை மங்கீஸ் எனும் இடத்தில் லாரி ஒன்று நான்கு கார்கள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்த இருவரும் தாயும் அவரது குழந்தையும் என்று நம்பப்படுகிறது என சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாகக் காலை 7 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கிடைத்த முதல் தகவலின் அடிப்படையில், நான்கு கார்கள் மீது லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாரி மோதிய கார்களில் ஒன்றில் 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும், 10 வயது சிறுமியும் இருந்ததாகவும், மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

நசுங்கி நொறுங்கிய வாகனங்களிலிருந்து பாதிக்கப்பட்ட அனைவரும் காலை 9.45 மணிக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார், ஆனால் 40 வயதுடைய பெண்ணும் சிறுமியும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகச் சுகாதார அமைச்சகத்தின் (கேகேஎம்) பணியாளர்கள் உறுதி செய்தனர்.

“மற்றொரு நபருக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காகப் பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :