NATIONAL

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை மற்றும் பினாங்கில் இலவசப் பஸ் சேவை

கோலாலம்பூர், ஜன 23 – எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாட்டப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு இரண்டு முக்கிய கோயில்களுக்கு ரெப்பிட் பஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் இலவசப் பஸ் சேவையை வழங்குகிறது.

இங்குள்ள பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் மற்றும் பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் ஆகியவையே அவ்விரு ஆலயங்களாகும் என்று ரெப்பிட் பஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

கூட்டரசு தலைநகரில் இந்த சேவை ஜனவரி 24 ஆம் தேதி காலை 5 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி நள்ளிரவு வரை 10 முதல் 15 நிமிட இடைவெளியில் செயல்படும்.

சென்ட்ரல் மார்க்கெட் பஸ் ஹப் பிளாட்ஃபார்ம் ஏ8லிருந்து பத்து கேவ்ஸ் வரையிலான பிசி02, கோம்பாக் எல். ஆர்.டி. நிலையம் முதல் பத்து கேவ்ஸ் வரையிலான பிசி03 மற்றும் பத்து எம்.ஆர் டி. நிலையத்திலிருந்து இருந்து பத்து கேவ்ஸ் வரையிலான பிசி04 ஆகியவையே அந்த இலவசச் சேவைத் தடங்களாகும் .

இதற்கிடையில், பினாங்கு ஜெட்டி – அட்வென்டிஸ்ட் வழியாக அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலை உள்ளடக்கிய பாதையில் ஜனவரி 24 நள்ளிரவு முதல் ஜனவரி 26 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இந்த இலவசச் சேவை வழங்கப்படும்.

தைப்பூச விழாவைக் கொண்டாடுபவர்களுக்குத் தனது அன்பான வாழ்த்துகளை ரெப்பிட் கேஎல் நிறுவனம் தெரிவித்துக் கொண்டது. மேலும் இந்த இலவசச் சேவைகள் பற்றிய கூடுதல் விவரங்களை ரெப்பிட் கேஎல் மற்றும் ரெப்பிட் பினாங் சமூக ஊடக தளங்களில் காணலாம்.


Pengarang :