NATIONAL

சபாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வு- மாநில மேம்பாடு குறித்து விவாதம்

ஷா ஆலம், ஜன 23 – சபா மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் ஒன்றுகூடல் நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநில அரசின் லட்சியத் திட்டமான முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மேம்பாடு மற்றும் இதர முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு துறைகளின் திறனை மேம்படுத்துவது குறித்தும் இந்த ஒன்று கூடும் நிகழ்வில் விவாதிக்கப்படும் என்று இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

மாநில தலைமைத்துவ மன்றத்தின் நான்கு நாள் ஒன்று கூடும் நிகழ்வில் நான் கலந்து கொண்டுள்ளேன். அந்த ஒன்று கூடும் நிகழ்வு சபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் நேற்று முன்தினம் தொடங்கியது என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் மத்திய தவணைக்கான (உத்தேச) மறுஆய்வு உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒன்றுகூடும் நிகழ்வின் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.
இது தவிர, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வசமுள்ள பல்வேறு துறைகளின் நிர்வாக நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தி மேம்படுத்துவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த ஒன்று கூடும் நிகழ்வில் சிலாங்கூர் அரசு தலைமைச் செயலகத்தின அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், டத்தோ பண்டார்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநில அரசு துறைகளின் தலைவர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்தாக அவர் தெரிவித்தார்.


Pengarang :