NATIONAL

தைப்பூசத்தை முன்னிட்டு மாநகரில் இன்றிரவு தொடங்கி 23 சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஜன 23- தைப்பூச விழாவை முன்னிட்டு மாநகரிலுள்ள 23 சாலைகள் இன்றிரவு தொடங்கி கட்டங் கட்டமாகப் போக்குவரத்துக்கு மூடப்படும் அல்லது தடம் மாற்றி விடப்படும்.

மாநகரில் நடைபெறக்கூடிய வெள்ள இரத ஊர்வலத்தை முன்னிட்டு இந்த சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படுவதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

ஜாலான் துன் எச்.எஸ்.லீ, ஜாலான் சுல்தான், ஜாலான் டான் செங் லோக், ஜாலான் புடு, ஜாலான் துன் பேராக், ஜாலான லெபோ அம்பங், ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் பெலியா, ஜாலான் ஸ்ரீ அமார், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, ஜாலான் துன் பேராக், ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் ஈப்போ லாமா, ஜாலான் ஈப்போ, மற்றும் ஜாலான் சாலே ஆகியவையே போக்குவரத்துக்கு மூடப்படவிருக்கும் சாலைகளாகும்.

எதிர்வரும் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு வெள்ளி இரதம் மீண்டும் ஜாலான் துன் எச்.எஸ்.லீ, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நோக்கி வரும் போது அதே சாலைகள் கட்டங் கட்டமாகப் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அக்காலக்கட்டத்தில் மேற்குறிப்பிட்ட சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாகனமோட்டிகளைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதன் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-20719999 என்ற எண்களில் ஜாலான் துன் எச்.எஸ்.லீ போக்குவரத்து போலீஸ் நிலையம் மற்றும் 03-20260267 என்ற ஹாட்லைன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :